Friday, June 03, 2011

உப பாண்டவம்


பாரதம். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும்,அது பற்றி பேசும் பொழுதும் புது புது விஷயங்கள், கதைமாந்தர்கள், மர்மங்கள் என எனக்கு அறிமுகப்படுத்திகொண்டே இருக்கும் ஒரு சுரங்கம். என்றேனும் முழு பாரதத்தினை படித்துவிட வேண்டும். தற்பொழுது எஸ். ராமகிருஷ்ணனின் "உப பாண்டவம்" நாவலை படித்துகொண்டிருகிறேன். முற்றிலும் புதிய கோணம், நம்ப முடியாத முடிச்சுகள், நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் நல்லவர்களாகவும் உருமாறும் விதம் படிப்பவரை நாவலினுள் இழுத்துச்செல்கிறது.

எப்படி பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்ற கேள்விக்கு இதுவரை எனக்கும், பலருக்கும், தெரிந்த ஒரே பதில் காந்தாரி தற்செயலாக கூறியதாக அறியப்படும் "கொண்டு வந்த பிட்சையினை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்ற வார்த்தைகளே. அனால் அந்த வார்த்தைகளுள் இருக்கும் மறைபொருள் இந்த நாவலில் கிடைக்கிறது.

யுதிஷ்டிரன் குயவனின் சுடுபானைகள் கிடந்த இருளில் நின்று கொண்டிருந்தான். நாளை சுயம்வரம் நடக்கவிருக்கிறது. பாஞ்சால தேசத்து அரசனின் மகளை மணந்துகொள்வதால் அவர்களின் தேசப்பாதுகாப்பும், பலமும் கூடக்கூடும். இதுவரை தான் எந்த பெண்ணையும் அறிந்தவனேயில்லை. பீமன்தான் ஒரு பெண்ணை ருசித்தவன். அவளும் ராட்சஸ வம்சம். தம்பியர்களில் அர்ஜுனன் தான் சுந்தரன், எந்தப்பெண்ணையும் வசீகரித்துவிடக்கூடியவன். தான் மூத்தவனாகவும், தேசத்து காவலனாகவும் இருக்கவேண்டிய நிலை உண்டாகியிருப்பதால், நாளை அந்த அஸ்திரப் போட்டியில் தன்னால் நாண் ஏற்றி குறியை வீழ்த்திவிட முடியும்தானே என யோசனை கொண்டிருந்தான். 

குயவன் எங்கிருந்தோ சுள்ளிகளை பொறுக்கிவந்து பானைகளை சுடுவதற்காக எரித்து கொண்டிருந்தான். யுதிஷ்ட்ரன் அவனிடம் பாஞ்சாலியைப் பற்றிக்  கேட்டான். குயவன் அவள் யாகசேனி. நெருப்பில் பிறந்தவள். அவள் உடலும் கண்களும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் என்றான். அவளின் வனப்பைப் பற்றி தாதிகள் வெளியே சொன்ன சேதிகளை  யுதிஷ்ட்ரன் கேட்டுக்கொண்டிருப்பதை தன் இருப்பிடத்திலிருந்தே குந்தி அறிந்து கொண்டிருந்தாள்.
 இதுவரை யுதிஷ்ட்ரன் எந்தப் பெண்ணைப் பற்றியும் இத்தனை ஈடுபாட்டுடன் கேட்டுக்கொண்டிருந்ததில்லை என்பதை குந்தி அறிந்தாள். யுதிஷ்ட்ரன் குயவனிடம் பேசிவிட்டுத் திரும்பும்போது இருளில் அர்ஜுனன் நின்று கொண்டிருப்பது புரிந்தது. அவன் கைகளில் வில், அம்பு எதுவுமில்லை. நகுலன் அருகே சென்று கேட்டான்.

"என்ன செய்கிறாய் அண்ணா...?"

"அஸ்திரப் பயிற்சி".

நகுலனுக்கு புரியவில்லை. அர்ஜுனன் நிதானமாக கேட்டான்.

"நாளை சுயம்வரத்திற்கு போகிறோமா?"

"அதை மூத்தவர் தான் முடிவு செய்வார்"

நகுலன் அர்ஜுனனின் அருகாமையில் அமர்ந்து கொண்டான். அவன் தயக்கத்துடன் சொன்னான்.

"நாம் மறு உருவில் இருக்கிறோம். பிராமணர்களாக ."

"பிராமணர்கள் சுயம்வரத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்தாம். நம் குரு பிராமனர்தானே..?" 

பின் அவர்கள் பிரிந்து உறங்கச்  சென்றனர். 
சகாதேவன் நட்சத்திரங்களின் நகர்வைக் கண்டபடியிருந்தான். குயவன் அவனிடம் கேட்டான்.

"என்ன முணுமுனுக்கிறீர்கள்?"

"விதியை, விலக்க முடியாத நம் விதியை..."

"உங்களுக்கு காலத்தைக் கணிக்கத் தெரியுமா...?"

சகாதேவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

"உன் வீட்டினை நாளை பிரச்சினைகளின் பற்கள் கவ்விப்பிடிக்க இருக்கிறது"

"நோய் கொண்டா..?" கேட்டான் குயவன்.

சகாதேவன் பதில் பேசவில்லை. மறுநாள் அவர்கள் அந்தணர்களாக சபா மண்டபத்திற்குப் போனபோது அங்கே பல தேச அரசர்கள் அமர்ந்திருந்தார்கள்.கிருஷ்ணனும், கர்ணனும், துரியோதனனும் வந்து அமர்ந்திருந்தார்கள். அஸ்வத்தாமன் கூட வந்திருந்தான்.

யாவரும் வில் திறம் அறிந்தவர்கள்.

பாஞ்சாலியை சில பேடிகள் அலங்கரித்து அழைத்து வந்தனர். யுதிஷ்ட்ரன் அவளைப் பார்த்தவுடன் ரூபவதியெனத் தெரிந்துகொண்டான். பிராமண வேஷத்தில் இருந்த ஐவர் கண்களும் அவளை அறிந்து கடந்தன.

பலரும் வில்லில் நாணேற்றி இலக்கைத் தகர்பதற்க்கு முயன்று தோற்ற நிசப்தம் கூடியது. இனி பொருத்திருக்கக் கூடாது என யுதிஷ்ட்ரன் தனது சகோதரர்களைப் பார்த்தான். தான் எழுந்து சென்று வில்லை நாண் ஏற்றிட வேண்டுமென வேட்கை கொண்டவனாக அவன் தலை நிமிரும் முன்பு அர்ஜுனன் அண்ணனின் ஆசியை வேண்டி பாதங்களைப் பற்றினான். யுதிஷ்ட்ரன் செயலற்றவனாகக் கைகளை அர்ஜுனன் தலையில் வைத்தான். மறுகணம் அர்ஜுனன் வில்லில் நாணேற்றி சுழலும் இலக்கை அடித்து வீழ்த்திய சப்தம் கேட்டது.

ஒரு பிராமணன் இலக்கினை அறுத்து வீழ்த்திவிட்டான் என்ற செய்தி எங்கும் பரவியது. அரண்மனையின் வெளியே நின்றவர்கள் இதனை உரத்துக் கத்தியபடி ஓடுவதை குயவன் கண்டான்.  ஜெயித்தவன் ஐந்து பிராமணர்களில் ஒருவன் என்றதும் தனது வீட்டின் அகதிகளை அவன் நினைவு கொண்டான். வீடு திரும்பிய குயவன், மிக மெதுவாக தன் மனைவியிடம் " நாம் இங்கிருந்து தப்பிப் போய்விடுவோம். உயிர் ஆபத்து காத்திருக்கிறது. உடல் நடுங்குகிறது" என மெதுவாக சொன்னான். அவர்களை கவனித்துக் கொண்டிருந்த குந்தி என்ன நடந்தது என்று கேட்டாள்.

"உன் புதல்வர்களில் ஒருவன் சுயம்வரத்தில் வென்று விட்டான். ஒரு பிராமணன் இந்த தேசத்தின் மாப்பிள்ளையா? என்று அரண்மனையே பற்றி எரிகிறது."

"நீ பயம் கொள்ளத் தேவையில்லை. என் ஐந்து புத்திரர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அவர்கள் வரும்வரை பொறுத்திரு."

திரும்பியிருந்தார்கள் ஐவரும். எல்லா நாளையும் போல அவள் முதலில் யுதிஷ்ட்ரனை மட்டுமே அழைத்தாள். அவன் இன்று தாங்கள் போன காரியம் நல்ல விதமாக முடிந்தது என்றான். அவன் மகனின் கண்களை கண்டபோது அதில் ஆழமான வடு இருந்தது. அவள் யுதிஷ்ட்ரன் பின் நின்ற பீமனுக்கு அடுத்த அர்ஜுனன் பக்கம் கண்களை திருப்பினாள். அவன் தான் இன்று ஒரு பொருளை வென்றதாக கூறினான். அவள் சில நிமிஷங்கள் மௌனித்துவிட்டுச் சொன்னாள்.

"பகிர்ந்து கொள்ளுங்கள் ஐவரும்".

யுதிஷ்ட்ரன் தாயின் கண்களை நிமிர்ந்து பார்த்தான்.அவனால் ஆழத்தை அறிய முடியவேயில்லை. அவள் திரும்பவும் மௌனமாகிவிட்டாள். அர்ஜுனன் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் தாயின் வேண்டுகோளை திரும்ப கேட்டான். யுதிஷ்ட்ரன் பதில் சொன்னான்.

"ஐவரையும் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள்"

யுதிஷ்ட்ரன் பதிலால் கோபமுற்ற அர்ஜுனன் பதிலற்றவனாக வெளியேறி போகும்போது தாயைப் பார்த்து சொன்னான்.

"நான் இன்று வென்றது பாஞ்சாலனின் மகள் பாஞ்சாலியை"

குந்தி இப்போது மிகவும் திண்மையுடன் சொன்னாள்.

"இருக்கட்டும்.. என் வாக்கு திரும்ப பெற முடியாதது"

அவர்களில் பீமன் மட்டுமே இதனை உடனே செயல்படுத்த வேண்டும் என்றான். பீமனுக்கு பாஞ்சாலியின் உருவம், அழகு துவளச் செய்து விட்டிருந்தது. குந்தி அர்ஜுனனிடம் கேட்டாள்.

"எங்கே அந்த பெண்..?"

"வெளியே காத்திருக்கிறாள். அனுமதிக்காக"/

"அழைத்து வா.. அவளை..."

குயவன் அந்த முதிய தாயை பார்த்துக் கொண்டேயிருந்தான். அவர்கள் யாவரையும் எல்லா நாட்களையும் போல வெளியே படுக்கச் சொல்லிவிட்டு குந்தியும் பாஞ்சாலியும் மட்டும் அருகாமையில் உறங்கினர். குயவன் தன் மனைவிடம் ரகசியமாக சொன்னான்.

"காமத்தின் நாவு தன் பிள்ளைகளை பிரித்துவிடாதபடி எத்தனை சாதுர்ய முடிவு கொண்டாள் இந்த தாய். இவள் அரச குடும்பத்தவளாகத்தான் இருக்ககூடும்"

குந்தி, ஐவரின் தாய், வலிய ஸ்திரீ, பாஞ்சாலியின் மனதையும் மாற்றிவிட்டாள். யாவும் சுமூகமாகவே முடிந்தது.

Saturday, February 12, 2011

உலோகம்

உலோகம் - சமீபத்தில் வாசித்த ஜெயமோகனின் நாவல்.
முதல் பக்கத்திநிலேயே நாவலின் உள்ளே செல்லமுடிந்தது.

"காடு" நாவலினுள் செல்ல எனக்கு 20 பக்கங்கள் தேவைப்பட்டது. என்னால் சுஜாதவினை எந்த மனநிலையிலும் வாசித்துவிடமுடிகிறது ஆனால் ஜெயமோகன், தனி மனநிலை தேவைபடுகிறது. மூன்று வருடங்களாக "கொற்றவை"யினுள் மூன்று வருடங்களாக புகமுடியாமல் உள்ளேன்.

சமீப நாட்களாக நிறைய சிறுகதைகளை அவரது தளத்தில் காண முடிகிறது. நல்ல வாசிப்பனுபவத்தினை தரும்.


Wednesday, January 26, 2011

எந்திரன் பார்த்த கதை

சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் குல நிறுவனங்களிலிருந்து வெளியிடப்படும் எந்த ஒரு படத்தினையும் என் பணத்தினை செலவு செய்து திரையரங்கிற்கு சென்று பார்பதில்லை என்ற கொள்கையினை எனக்குள் வகுத்துக்கொண்டேன்.

கொள்கைக்கு விடப்பட்ட முதல் சவால் - எந்திரன்.

படம் வெளியாகி ஒரு மாதம் வரை தாக்குபிடித்துவிட்டேன். தங்கமணியின் குடும்பத்தில் அனைவரும் எந்திரனை தரிசித்து பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டிருந்தனர். உறவினர்கள் கூடும் சபையில் பலரும் எந்திரனின் வித்தைகளை சிலாகிக்க அந்த உரையாடல்களில் கலந்துகொள்ள முடியாமல் தங்கமணி தன் தகப்பனாரிடம் மாமனாரிடம் புகார் காண்டம் வாசிக்க, மாமனாரின் வீட்டு முற்றத்தில் நசுங்கிய சொம்பும், நாற்காலியும் கொண்டுவரப்பட்டது .

"கொள்கை" என்ற அகராதியில் இல்லாத வார்த்தைகளை கேட்டு வீடே கொந்தளித்தது. இடது கையினில் டிக்கெட்டினை வைத்தால் மட்டுமே வலது கையிலுள்ள எண்ணை தலையில் தேய்க்கப்படும் என்று முதல் வெடியினை கொளுத்தி தலைதீபாவளி கொண்டாட்டத்தினை தங்கமணி துவங்கிவைத்தாள். பந்தியில் எனக்குமட்டும் சதையில்லாத வெறும் எலும்புகள் வந்து விழுந்தன, மற்றவர்களுக்கு டபுள் ஆம்லெட், எனக்கு மஞ்சள்கரு நீக்கப்பட்ட ஆம்லெட்.

எது நடந்தாலும் கொண்ட கொள்கையினை கைவிடுவதில்லை என்று உறுதிபூண்டேன்.  பல அஸ்திரங்களை தாங்கி நான்  போரிட்டுக்கொண்டிருந்த போது கொள்கையில் சிறு ஓட்டையினை கண்டுபிடித்த மச்சான் - உன் பணத்தினைதானே செலவழிக்கமாட்டாய் - தன் பணத்தினைக்கொண்டு இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிவந்தான். நான் அபிமன்யுவானேன், சக்ராவியூகத்தில்  வீழ்ந்தேன்.

Friday, October 22, 2010

Your excellency return us to paradise, return us to paradise

Your excellency return us to paradise, return us to paradise

Thursday, May 27, 2010

வாழ்க்கை

ரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக மூத்திரம்  போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.
- சுஜாதா            

Tuesday, March 02, 2010

சுஜாதா

தற்பொழுது சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" (விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்தினை படித்து வருகிறேன். 1970களில் தொடங்கி எழுதி வந்திருக்கிறார். இதுவரை படித்ததில் கவர்ந்த சில பகுதிகள் கீழே:

ஆகஸ்ட் 1974 --














டிசம்பர் 1988 --


















படிக்கும்போதே இதழோரம் அரும்பும் புன்னகையினை மறைக்க முடியவில்லை. புன்னகைத்து தலை உயர்த்திப்பார்த்தால் ரெயிலில் குறைந்தது நான்கு கண்கள் என்னை பார்த்துக்கொண்டிருகிறது.

Thursday, February 25, 2010

Testophobia

Greenpeace India - IT துறையில் வேலை செய்யும் சிலபலர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். மாதம்தோறும் குறைந்தபட்சமாக ரூ.250 ஐ தங்களுடைய வங்கிகணக்கில் அவர்களாகவே எடுத்துக்கொள்ள பட்டயம் எழுதி கொடுத்துள்ளனர். கேட்டால், உலகின் பசுமையினை பாதுகாக்க தம்மால் இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு சென்று ஏதும் செய்ய இயலாது, எனவே அவ்வாறு செய்பவர்களை ஊக்குவிக்கின்றோம் என்கிறார்கள். இப்படி canteen வாசலில்  ஜீன்ஸ், டீ-ஷர்ட் 'சல்லி'களிடம் (உபயம்: செல்வேந்திரன்) எழுதி கொடுத்துவிட்டு இவர்கள் நேரே செல்வது விளைநிலத்தை வறுமையின் துணைகொண்டு வாங்கி/அபகரித்து கூறு போட்டு கான்கிரீட் மரம் நட அழைக்கும்  rea(e)l-estate நிறுவனங்களிடம். 

*********

ள்ளி முதல் கல்லூரி வரை செக்குமாடு போல தேர்வினை மட்டுமே இலக்காக கொண்டு ஓடியவன் நான். சமீபகாலமாக எந்தவொரு கால நிர்ணயமும், இலக்கும் இல்லாமல் மனதிற்கு பிடித்த தொழில் சாராத, சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுகங்களை உணர்ந்தபின்  தேர்வு என்ற இல்லக்கினை மட்டுமே கொண்டு அக்கம் பக்கம் பாராமல் எழுத்துக்களை விழுங்குவது கடினமாக உள்ளது. தேர்வு என்ற சொல்லே ஒருவித அயர்ச்சியினை தருகிறது. அநேகமாக testophobia'வால் பாதிக்கப்பட்டுளேன் என்று நினைக்கின்றேன்.

Friday, February 12, 2010

சில புகைப்படங்கள்

Friday, February 05, 2010

எங்கும், எங்கும், பிளாஸ்டிக் மயம்

    
நேற்று குளித்து முடித்து துண்டினை உலர்த்த மொட்டை மாடி சென்ற பொழுது பார்த்த "பிளாஸ்டிக் முறம்".


வீட்டின் உரிமையாளர் கோதுமையினை அந்த முறத்தில் பரப்பி காய வைத்திருந்தார்.  நேற்றுதான் முதன்முதலாய் நான் பிளாஸ்டிக் முறத்தினை பார்க்க நேர்ந்தது. மூங்கில் கொண்டு முடையபட்டதை போல அச்சு கொண்டு செய்யப்பட்ட ஒன்று.

பார்த்தவுடன் ஆச்சர்யம் மேலோங்காமல் ஒருவித வருத்தமே தோன்றியது. உடன், சமீபத்தில் தீராத பக்கங்களில் படித்த கவிதை ஒன்று கண்முன்னே  நிழலாடியது:


நடைபாதி ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம். 

அருகே சென்று சில கோதுமை தானியங்களை கையிலெடுத்து உற்று பார்த்தேன், பிளாஸ்டிக் அல்ல நிஜ தானியங்கள்தான்.
 

கொஞ்சம் தேநீர் நிறைய கண்ணீர்

   
சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் கவிதை தொகுப்பில் "ஆளுக்கொரு கோப்பை" என்றொரு கவிதையினை படித்தேன்.நான் தேநீர் அருந்தும் முறையினை மாற்றிய வரிகள் அவை. அதுவரை தேநீர் அருந்துவதை ஒரு தினசரி கடனாக செய்துவந்தவன் அந்த தருணங்களை சிறிது ரசிக்க முயற்ச்சித்தேன்.

கவிதையின் சில வரிகள்:


தேநீர் பருகும் கணங்கள்
சில நிமிட திருவிழாக்கள்
.......
கூப்பிட்டபோது
வரம்தந்தோடிப்போகும்
மலிவு தெய்வம் தேநீர்

உதடுகளில் சூடுகொளுத்தி
கதகதப்பாய் நாவுதடவி
சுவயரும்புகள் ஒவ்வொன்றாய்த்
தொட்டெழுப்பி
.........
ஆனால் தேவரீர்
தேநீர்பருகத் தெரியவில்லை
உங்கட்கு
பொன்கரைத்த அதன் நிறம் பாராமல்
எங்கேயோ வெறிக்கிரீர்கள்
நுரையுடையும் அதன்
மொழிகேளாமல்
அர்த்தம் வற்றிய சொற்களால்
பெசிக்கொண்டிருகிறீர்கள்
....
தேநீர் தத்துவமே
புரியாத நீங்கள்
எங்கனந்தான் புரிவீரோ
இருப்பை
இறப்பை
கடவுளை
காதலை
அணுவை
அண்டத்தை
......


சென்னையின் நெருக்கடி மிகுந்த சைதையில் வைரமுத்துவின் வரிகள் உணர தேநீர் அருந்துவது பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. உதட்டில் தேநீர் கொண்டு சூடு கொளுத்தும்முன் சுட்டெரிக்கும் வெயில் மண்டையினை கொளுத்தி விடும், நுரையுடையும் நுண் ஒலிகள் வாகன இறைச்ச்சலில் கரைந்துவிடும், வாழ்க்கையின் தத்துவங்களே பெரும்பாலும் புரியாமல் விழிக்கும் பொழுது தேநீர் தத்துவதினை எங்ஙனம் யோசிப்பது. விடுமுறைகளில் ஊர் செல்லும் சில சமயம் நுரை உடையும் ஒலி கேட்டு, இமைகள் மூடி, உதடுகளில் சூடு பரப்பி அருந்தியதுண்டு.  ஆனந்தமான தருணங்கள் அவை.

அந்த ஆனந்தமான தருணங்களை சமீபத்தில் புரட்டி போட்டது "எரியும் பனிக்காடு" நாவல். கொத்தடிமைகளாய் உலகினுடனான அனைத்து தொடர்புகளையும், வாழ்வின் அனைத்து சுகங்களையும் இழந்து, அட்டைகள் உறிஞ்சியது போக நில்லாமல் ஒழுகிய குருதியினை தேநீர்ச்செடி வேர்களில் ஊற்றி, தங்களை தாங்களே பலிகொடுத்து  தேநீர் தோட்டங்களை உருவாக்கி வளர்த்த ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பின் பயனே இன்று உதகையிலும், மைசூரிலும், கூர்க்கிலும் உடலெங்கும் பச்சை உடை பூண்டிருக்கும் தோட்டங்கள்.


 சில நாட்களாக பொன்கரைத்த தேநீரின் நிறம் ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம் கலந்ததாலே வந்ததாக தோன்றுகிறது.

Wednesday, January 06, 2010

2010 சென்னை புத்தக கண்காட்சி / CCNA


இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:

. அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு
௨. "? - நாளையை கேள்விக்குறி ஆக்கும் இன்றைய அரசியல் பற்றி" - ஞாநி - ஞானபாநு
௩. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (2005 வரையிலான சிறுகதைகள்) - உயிர்மை பதிப்பகம் 
௪. காடு - ஜெயமோகன் - தமிழினி 
௫. ஏழாம் உலகம் - ஜெயமோகன் - தமிழினி 
. ரப்பர் - ஜெயமோகன் - கவிதா வெளியீடு 
௭. ஓலைச்சுவடி (இந்துமத ஆசார-நம்பிக்கை ரகசியங்கள்) - Dr. வெங்கனூர் பாலகிருஷ்ணன் - ADDONE Publishing  Group 
௮. இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார் - அல்லயன்ஸ் 
௯. தேசாந்திரி -  எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன் பிரசுரம்
௧௦o௦௦. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் 
௧௧. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் - திருமகள் பதிப்பகம்  
௧௨. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - காலச்சுவடு பதிப்பகம் 
௧௩. பொய்த் தேவு - க.நா.சுப்ரமண்யம் - காலச்சுவடு பதிப்பகம் 
௧௪. எரியும் பனிக்காடு(Red Tea) - இரா.முருகவேள்(P.H. Daniel) - விடியல் பத்திப்பகம் 
௧௫. மகாபாரத உபகதைகள் - அரவிந்தன் - வானவில் புத்தகாலயம் 
௧௬. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் - தமிழ்ப்புத்தகாலயம் 
௧௭. ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள் - அசோகமித்திரன் சிறுகதைகள் - காலச்சுவடு பதிப்பகம் 
௧௮. அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - விகடன் பிரசுரம் 
௧௯. காட்டாறு - ஜே.ஷாஜஹான் - வம்சி புக்ஸ் 

சென்ற வருட கண்காட்சியில் வாங்கியவற்றில் சில புத்தகங்களே இன்னும் தூங்கிக்கொண்டு உள்ளன, அடுத்த வருடத்திருக்குள் அவற்றையும் சேர்த்து படித்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இவைகளுக்கு முன்பாக படிப்பதற்கு நான் இரண்டு வருடங்களாக வைத்து "முக்கி"க்கொண்டிருக்கும் ஒரு "முக்கிய" புத்தகம் உள்ளது. அது  "Cisco Certified Network Associate - Todd Lammle".

இனிமேலும் Certification எல்லாம் mandatory இல்லை என்று உதார் விட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டமுடியாது போல உள்ளது.

2010௦-ஜனவரிக்குள்ளாக CCNA பரீட்சையினை முடிக்க வேண்டுமென்று என்னுடைய அலுவலகத்தில் வாங்கியுள்ள புதிய Cisco Nexus 7010 Switch மீது  சபதம்(?) எடுத்துள்ளேன்.
 
சிவகாமியின் சபதம் நிறைவேறியதா என்று தெரியாது, எப்பாடுபட்டேனும் என்னுடைய சபதத்தை முடிக்க வேண்டும்.

Monday, December 14, 2009

புகைப்படங்கள்








































































































Friday, November 27, 2009

தந்தை மகற்கு ஆற்றும்....

காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக மட்டுமே நான் இதுவரை அறிந்து வந்துள்ளேன். அவருக்கும் பிள்ளைகள் உண்டு, ஒன்றல்ல நான்கு என்பதை இதுவரை எங்கும் கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவில் இல்லை. ஒரு சராசரி தந்தையாக அவரின் செயல் மற்றும் ஆளுமை ஜெயமோகன் அவர்களின் இந்த இரண்டு கட்டுரைகளால் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

http://jeyamohan.in/?p=5013

http://jeyamohan.in/?p=5040

ஆங்காங்கே தமிழின தலைவர் கலைஞரின் பிம்பம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

சற்று பெரிய கட்டுரைகள், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும்.

Monday, November 16, 2009

சென்னை - 2

எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லரிப்பா போச்சு.

நேற்று தான் சென்னையில் என்னுடைய பத்து வருடங்கள் பற்றி ஒரு பதிவினை போட்டு வைத்திருந்தேன், இன்று என் அலுவலகத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.....

இன்றைக்கு அலுவலகத்தில் என்னுடைய அணியில் ஒருவர்(விஜய்) புதியதாக சேர்ந்தார். அவரை எனக்கு அறிமுகபடுத்த HRடீமில் இருந்து அழைத்தார்கள். நானும் சென்றேன். அங்கே இரண்டு புதியவர்களும் HRரும் நின்று கொண்டிருந்தார்கள். புதியவர்களில் ஒருவரை அரைகண்ணால் பார்த்தபடியே HRரிடம் இவர்தானா விஜய் என்று கேட்டேன், அவர்கள் இல்லை மற்றொருவர் என்று கூற நானும் அவரை அழைத்துக்கொண்டு என் இருப்பிடம் வந்துவிட்டேன்.
புதியவருக்கு அலுவலகம் மற்றும் பணிகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன், சற்று தொலைவில் இருந்து என்மேல் இரண்டு கண்கள் ஊறுவதை உணர்ந்து திரும்பி பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன் நான் இவரா விஜய் என்று கேட்ட நபர் என்னையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். ஒரு ஐந்து வினாடிகள் அவரை உற்று பார்த்தவுடன் என் உடம்பில் ஒரு வினாடி மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது. செந்தில் அண்ணன். சென்னையில் கழித்த பத்து வருடங்களில் முதல் மூன்று வருடங்கள் என்னுடைய அறையில் இருந்தவர். இம்மாநகரில் எனக்கு கிடைத்த முதல் சில அறிமுகங்களில் அடங்குபவர்.

எவ்வளவு துன்பங்கள், கடினங்களை எதிர் கொண்டாலும் சிரித்த முகத்துடன் இருப்பவர். பணி நிமித்தமாக பெங்களுருக்கு குடி பெயர்ந்தார், அதன் பிறகு அவருடனான தொடர்பு முற்றிலுமாக அறுபட்டது. பலமுறை நினைத்தும் விடாத முயற்சி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

அதே புன்சிரிப்பு மாறாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்" - அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!

இன்று அவருடன் சென்று குடித்த தேநீர் வழக்கத்தை விட நன்றாக இருப்பதாகப்பட்டது.

2012 - உலகம் அழியுமா?

2012-ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, மனித இனம் விரைவில் அழியப்போவது என்னமோ உண்மை.

http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=117&Itemid=9

பணம் கொண்டு இயற்கையினை வளைக்க முடியாதென்பதை மானுடன் உணரும் வரை ஒன்றும் செய்ய முடியாது.

Sunday, November 15, 2009

சென்னை - 1

நேற்று நடந்தது போல் இருக்கிறது. 08th Aug'1999, மின்னணு பொறியியல் படிப்பதற்காக பிறந்து வளர்ந்த ஊரை விட்டு சென்னை வந்து 50 லட்ச மக்கள் வெள்ளத்தில் கலந்து கரைந்த தினம். பத்து வருடங்கள் ஓடி விட்டன.

வழியனுப்ப வாசல் வரை வந்த பாட்டி, அம்மா, சித்தப்பா, சித்தி, அக்கா அனைவரையும் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் ஏற்கனவே அக்காவும், அண்ணனும் வெளியூர் சென்று விடுதியில் தங்கி படித்து வருகின்றனர், அப்படி செல்லும் போது அவர்கள் யாரும் அழுதது இல்லை. சென்னை வெறும் ஐந்து மணி நேர பயணமென்பதாலும், என் அத்தை அங்கே வசிப்பதாலும், தந்தை தொழில்ரீதியாக பல வருடங்களாக வாரமொருமுறை சென்னை விஜயம் செய்தவராததாலும் யாருக்கும் நான் சென்னை செல்வது குறித்து அவ்வளவாக பயமில்லை. எனக்கோ மிரட்சியாக இருந்தது, மதியம் சாப்பிட்ட பிரியாணி செரிக்காமல் தொண்டைவரை வந்து வந்து சென்றுகொண்டிருந்தது.

என் அழுகையினை எதிர்பார்க்காத அனைவரும் சிரித்துவிட்டனர். ஏன் அழுதேன் என்று இப்போது நினைத்து பார்த்தால் எனக்கும் சிரிப்புதான் வருகிறது.

சைதாப்பேட்டை - சென்னையின் வளைவு சுழிவுகளை எனக்கு கற்று கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கின்ற இடம். பத்து வருடங்களில் எட்டு வருடங்களை இங்கே தான் கழித்தேன். ஒத்தையடி பாதை போல சுருக்கப்பட்ட தெருக்கள், அவற்றிலிருந்து கிளைபரப்பும் சந்துக்கள், தெருவிற்கு தெரு உள்ள கோவில்கள், Boat Club, அண்ணா நகர், பெசன்ட் நகர், அடையார் போன்று தனவாங்கள் மட்டுமே வாழும் இடமாக அல்லாமல் வறுமை கோட்டிற்கு மேலும், கீழும், மீதும் பயணம் செய்யும் அத்தனை மக்களையும் கொண்ட அழகிய அசுத்த இடம்.

இந்த பத்து வருடங்களில் சென்னையில் எனக்கு பிடித்த இடங்கள், மக்கள், உணவு விடுதிகள் மற்றும் சிலவற்றை பதிவு செய்யத்தோன்றியது. அதற்கு என் படித்துறையை விட வேறு நல்ல இடமேது?.

வரும் நாட்களில் அதனை செய்யலாமென்று உத்தேசித்துள்ளேன்....

சச்சின் மட்டும் தான் 20 வருடங்கள் கொண்டாடுவாரா??? நாங்களும் தான்...

Monday, November 09, 2009

கூட்டாஞ்சோறு - 09/11/09


வெள்ளந்தி மனசு
என் தந்தை பால் வியாபாரம் செய்து வருகிறார். குடியாத்தத்திற்கு அருகிலுள்ள கிராமங்களிற்கு சென்று விவசாயிகளின் பசுக்களில் பால் கறந்துவர 4/5 பணியாட்கள் இருப்பார்கள். அதில் ஒருவரின் பணி காலையிலும் மாலையிலும் மணிக்கொரு முறை சென்று அந்நேரத்தில் அவர்களிடம் உள்ள பாலினை சேகரித்து வருவது. என்னுடைய பள்ளி நாட்களில் வேலையாட்கள் யாரவது விடுமுறையில் சென்றால் நானோ அல்லது என் அண்ணன்னோ பாலினை சேகரித்து வர செல்வோம். அப்படி ஒருமுறை செல்கையில், மூங்கில்பட்டு கிராமத்தில் ஒரு வரப்பு ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்து குபேந்திரன்(பணியாள்) பால் கறந்துவர காத்திருந்தேன், என்னருகில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வந்து அமர்ந்து உள்ளூர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையில் கரும்பு சோகை கட்டும், இடுப்பில் வெட்டரிவாளும் கொண்டு எங்களை கடந்து சென்றாள். வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தவர்களை கண்ட அவர் அந்த இருவரில் ஒருவரைப்பார்த்து உரக்கச்சொன்னார்:

என்ன, மருமவ புள்ள இப்படி வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தா, உன்னைய நம்பி எப்பிடி எம்பொண்ண குடுக்கறது?

மொதல்ல நீ பொண்ண பெத்துப்போடு அப்புறம் பாரு நான் எப்படி துட்டு சேக்குறேன்னு..

உன்னைய நம்பி நான் பொண்ண வேற பெத்து போடனுமாக்கும், போய் பொழப்ப பாரு மொதல்ல..

இவ்வாறு சொல்லிக்கொண்டே அந்தப்பெண் சென்றுவிட்டார், இருவரும் தங்கள் பேச்சினை தொடர்ந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அந்தப்பெண் பதில் கூறிய இளைஞசனின் தெருவில் வசிப்பவர், மேட்டு ரவியின் மனைவி என்று தெரிந்தது.

ஏனென்று தெரியவில்லை, அந்த சம்பாஷனை நடந்து பல வருடங்கள் ஆகியும் என் நினைவில் அப்படியே படிந்துள்ளது.

கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனசினை இந்த சம்பவத்தில் நாம் சிறிது தெரிந்து கொள்ளலாம். தான் வாழ வந்த ஊரில் ஒருவன் வெட்டியாய் இருப்பதை பார்த்து தனக்கென்ன என்று போகாமல் உரிமையுடனும், நாசுக்க்காகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லிய வார்த்தைகள் சென்னை போன்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கைவருமா அல்லது இவ்வாறு பிறர் தடம் மாறும்போது உரிமை கொண்டு சொல்வார்களா என்பது சந்தேகமே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நகரம்
நான் இதுவரை படித்திருக்கும் சில பத்து புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்". இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில் உள்ள பல கதைகளை நான் திரும்ப திரும்ப பலமுறை படித்துள்ளேன். அதில் ஒரு கதை "நகரம்".

மூனாண்டிப்பட்டியினை சேர்ந்த வள்ளியம்மாள் தன்னுடைய மகள் பாப்பாத்தியினை கிராம பிரைமரி ஹெல்த் சென்டர் டாக்டரின் அறிவுரைப்படி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும், மருத்துவ வாடைகளும் அதனால் ஏற்படும் விளைவுமே கதை.

என்னை இதுவரை பாதித்த கதைகளுள் முக்கியமான ஒன்று இது.

உங்களிடம் பதினைந்து நிமிடங்களும், கதை படிக்கும் மனநிலையும் இருந்தால் இந்த link'ல் சென்று கண்டிப்பாக படிக்கவும்:

http://www.scribd.com/doc/2582483/sujatha
-

Wednesday, September 09, 2009

ஹலோ சூரியன் F.M

ரொம்ப நாளாக F.Mக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.


ஹலோ சூரியன் F.M

ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

சூரியன் F.M தாங்க.

அப்படியா? நான் சூரியன் I.P.S ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

புறாக் கூடு போல முப்பது ரூமு..

ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

அப்படியில்ல சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

நான் ரெடி.

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

மந்திரா

மந்திரா பேடியா?

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது.

சார், இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல யார புடிக்கும்?

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

சார், ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

யாரு சார் அது பக்கத்துல?

ஆறு.

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

அதான் ஆறு.

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.

அடுத்த ரவுண்ட் ஜி.கே

B.K தெரியும். அது என்ன G.K.?

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

அப்படி ஒரு சரக்கா?

டொக்

நண்பனொருவன் மின்னஞ்சலில் அனுப்பியது.

Tuesday, September 08, 2009

பிழைக்க தெரியாத மனுசன்

" என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன்.

கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?" - திரு.நல்லகண்ணு.


60 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார். மாதம் 3,500 ரூபாய் வாடகையில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஜாகை. பிழைக்க தெரியாத மனுசனா இருப்பாரு போல.


கொசுறு :

"தமிழக அரசு சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு மனை வீதம் சென்னை சோழங்கநல்லூர் அருகில் அரசு நிர்ணய விலையில் வீடு கட்ட ஒதுக்கி தரவேண்டும்" - வேலூர் M.L.A ஞானசேகரன்.

"ஓ, அதற்கென்ன பேஷா செய்துட்டா போச்சு" - கலைஞர்

Friday, August 21, 2009

யோவ், நான் யோக்கியன்யா!!!

10 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பினேன், வாஷிங்டன் D.C'யிலிருந்து லண்டன் வழியாக சென்னை பயணம். D.C'யில் security check'ர்க்காக வரிசையில் காத்திருந்த பொழுது எனக்கு ஐந்து நபர்களுக்கு முன்பாக அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் நின்றுக்கொண்டிருந்தார். அவரருகில் ஒரு வாலிபனும் அவர் இளம் மனைவியும் நின்றுகொண்டு பெரியவருடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் மூவரும் என்னருகில் வந்தார்கள், வாலிபன் கேட்டான்:

excuse me
yes
are you going to Chennai?
yes
cool, he is my father
oh..hello sir
hi
he is also going to Chennai, we are not travelling, he is going alone, will you be able to help him during the transit in London and also in flights?
உங்க அப்பாவுக்கு தமிழ் தெரியுமா?
yes, he knows
கவலை வேண்டாம், நான் உதவுகிறேன்
thank you very much.

பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் ஏறுவதற்கு முன் இருவரும் பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். எட்டு மணி நேர பயணத்திற்கு பிறகு லண்டன் வந்து சேர்ந்தோம். சென்னை விமானம் அடுத்த நான்கு மணி நேரத்தில். அமெரிக்க கிளம்பும் போதே உடன் பணிபுரியும் நண்பன் சென்னை திரும்பும் பொழுது அயல்நாட்டு சரக்கோடு தான் திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான்.

லண்டன் விமான நிலைய Duty free கடையில் அவனுக்கானதை வாங்க வேண்டும் என்பது என்னுடைய திட்டம். எதிர்பாரத விதமாக இந்த பெரியவர் என்னுடன் வந்து ஒட்டிக்கொண்டதால் அவரிடம்(மரியாதை காரணமாக) நான் சரக்கு வாங்க வேண்டும் அதற்கான கடைக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல தயங்கி ஒரு இடத்தில அவரை அமர செய்து சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறி சென்றேன். Duty free கடையில் இரண்டு பாட்டில்கள் வாங்கி திரும்பினேன். வந்த என்னிடம் சரக்கு பாட்டில்கள் இருப்பதை கவனித்த பெரியவர் கேட்டார்,

என்ன தம்பி சரக்கு வாங்கவா போயிருந்தீங்க?

(தயங்கியபடி) ஆமாங்க

அடடா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல்யிருக்ககூடாது, நானும் வந்து இருப்பேன்ல, நானும் உங்களை மாதிரி ஒரு குடிகாரன் தான்

என்னது குடிகாரனா!!!! ஹலோ பெரியவரே, எனக்கு குடிபழக்கம் கிடையாது , நான் யோக்கியன்

யோக்கியனா, யோக்கியனுக்கு சாராய கடையில என்ன வேலை?

இது ஏன் நண்பனுக்காக வாங்கினது

இப்படி தான் பலபேர் சொல்லிக்கிட்டு திரியறானுங்க, எந்த குடிகாரன் தன்னை ஒரு குடிகாரன்னு ஒத்துக்குறான்?

நம்புங்க எனக்கு குடி பழக்கம் கிடையாதுங்க...

சரி சரி வாங்க கடைக்கு போகலாம், எனக்கு சரக்கு வாங்கணும்

ஹலோ சார், நம்புங்க நான் குடிகாரன் இல்லை, சத்தியமா இது என் நண்பனுக்கு தான், ஹலோ சார்....

ஹூம்ம்ம்... எனக்கு செவி சாய்க்காதவராக கடையினை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.