Sunday, November 15, 2009

சென்னை - 1

நேற்று நடந்தது போல் இருக்கிறது. 08th Aug'1999, மின்னணு பொறியியல் படிப்பதற்காக பிறந்து வளர்ந்த ஊரை விட்டு சென்னை வந்து 50 லட்ச மக்கள் வெள்ளத்தில் கலந்து கரைந்த தினம். பத்து வருடங்கள் ஓடி விட்டன.

வழியனுப்ப வாசல் வரை வந்த பாட்டி, அம்மா, சித்தப்பா, சித்தி, அக்கா அனைவரையும் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் ஏற்கனவே அக்காவும், அண்ணனும் வெளியூர் சென்று விடுதியில் தங்கி படித்து வருகின்றனர், அப்படி செல்லும் போது அவர்கள் யாரும் அழுதது இல்லை. சென்னை வெறும் ஐந்து மணி நேர பயணமென்பதாலும், என் அத்தை அங்கே வசிப்பதாலும், தந்தை தொழில்ரீதியாக பல வருடங்களாக வாரமொருமுறை சென்னை விஜயம் செய்தவராததாலும் யாருக்கும் நான் சென்னை செல்வது குறித்து அவ்வளவாக பயமில்லை. எனக்கோ மிரட்சியாக இருந்தது, மதியம் சாப்பிட்ட பிரியாணி செரிக்காமல் தொண்டைவரை வந்து வந்து சென்றுகொண்டிருந்தது.

என் அழுகையினை எதிர்பார்க்காத அனைவரும் சிரித்துவிட்டனர். ஏன் அழுதேன் என்று இப்போது நினைத்து பார்த்தால் எனக்கும் சிரிப்புதான் வருகிறது.

சைதாப்பேட்டை - சென்னையின் வளைவு சுழிவுகளை எனக்கு கற்று கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கின்ற இடம். பத்து வருடங்களில் எட்டு வருடங்களை இங்கே தான் கழித்தேன். ஒத்தையடி பாதை போல சுருக்கப்பட்ட தெருக்கள், அவற்றிலிருந்து கிளைபரப்பும் சந்துக்கள், தெருவிற்கு தெரு உள்ள கோவில்கள், Boat Club, அண்ணா நகர், பெசன்ட் நகர், அடையார் போன்று தனவாங்கள் மட்டுமே வாழும் இடமாக அல்லாமல் வறுமை கோட்டிற்கு மேலும், கீழும், மீதும் பயணம் செய்யும் அத்தனை மக்களையும் கொண்ட அழகிய அசுத்த இடம்.

இந்த பத்து வருடங்களில் சென்னையில் எனக்கு பிடித்த இடங்கள், மக்கள், உணவு விடுதிகள் மற்றும் சிலவற்றை பதிவு செய்யத்தோன்றியது. அதற்கு என் படித்துறையை விட வேறு நல்ல இடமேது?.

வரும் நாட்களில் அதனை செய்யலாமென்று உத்தேசித்துள்ளேன்....

சச்சின் மட்டும் தான் 20 வருடங்கள் கொண்டாடுவாரா??? நாங்களும் தான்...

0 comments: