Friday, February 05, 2010

கொஞ்சம் தேநீர் நிறைய கண்ணீர்

   
சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் கவிதை தொகுப்பில் "ஆளுக்கொரு கோப்பை" என்றொரு கவிதையினை படித்தேன்.நான் தேநீர் அருந்தும் முறையினை மாற்றிய வரிகள் அவை. அதுவரை தேநீர் அருந்துவதை ஒரு தினசரி கடனாக செய்துவந்தவன் அந்த தருணங்களை சிறிது ரசிக்க முயற்ச்சித்தேன்.

கவிதையின் சில வரிகள்:


தேநீர் பருகும் கணங்கள்
சில நிமிட திருவிழாக்கள்
.......
கூப்பிட்டபோது
வரம்தந்தோடிப்போகும்
மலிவு தெய்வம் தேநீர்

உதடுகளில் சூடுகொளுத்தி
கதகதப்பாய் நாவுதடவி
சுவயரும்புகள் ஒவ்வொன்றாய்த்
தொட்டெழுப்பி
.........
ஆனால் தேவரீர்
தேநீர்பருகத் தெரியவில்லை
உங்கட்கு
பொன்கரைத்த அதன் நிறம் பாராமல்
எங்கேயோ வெறிக்கிரீர்கள்
நுரையுடையும் அதன்
மொழிகேளாமல்
அர்த்தம் வற்றிய சொற்களால்
பெசிக்கொண்டிருகிறீர்கள்
....
தேநீர் தத்துவமே
புரியாத நீங்கள்
எங்கனந்தான் புரிவீரோ
இருப்பை
இறப்பை
கடவுளை
காதலை
அணுவை
அண்டத்தை
......


சென்னையின் நெருக்கடி மிகுந்த சைதையில் வைரமுத்துவின் வரிகள் உணர தேநீர் அருந்துவது பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. உதட்டில் தேநீர் கொண்டு சூடு கொளுத்தும்முன் சுட்டெரிக்கும் வெயில் மண்டையினை கொளுத்தி விடும், நுரையுடையும் நுண் ஒலிகள் வாகன இறைச்ச்சலில் கரைந்துவிடும், வாழ்க்கையின் தத்துவங்களே பெரும்பாலும் புரியாமல் விழிக்கும் பொழுது தேநீர் தத்துவதினை எங்ஙனம் யோசிப்பது. விடுமுறைகளில் ஊர் செல்லும் சில சமயம் நுரை உடையும் ஒலி கேட்டு, இமைகள் மூடி, உதடுகளில் சூடு பரப்பி அருந்தியதுண்டு.  ஆனந்தமான தருணங்கள் அவை.

அந்த ஆனந்தமான தருணங்களை சமீபத்தில் புரட்டி போட்டது "எரியும் பனிக்காடு" நாவல். கொத்தடிமைகளாய் உலகினுடனான அனைத்து தொடர்புகளையும், வாழ்வின் அனைத்து சுகங்களையும் இழந்து, அட்டைகள் உறிஞ்சியது போக நில்லாமல் ஒழுகிய குருதியினை தேநீர்ச்செடி வேர்களில் ஊற்றி, தங்களை தாங்களே பலிகொடுத்து  தேநீர் தோட்டங்களை உருவாக்கி வளர்த்த ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பின் பயனே இன்று உதகையிலும், மைசூரிலும், கூர்க்கிலும் உடலெங்கும் பச்சை உடை பூண்டிருக்கும் தோட்டங்கள்.


 சில நாட்களாக பொன்கரைத்த தேநீரின் நிறம் ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம் கலந்ததாலே வந்ததாக தோன்றுகிறது.

0 comments: