Friday, June 03, 2011

உப பாண்டவம்


பாரதம். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும்,அது பற்றி பேசும் பொழுதும் புது புது விஷயங்கள், கதைமாந்தர்கள், மர்மங்கள் என எனக்கு அறிமுகப்படுத்திகொண்டே இருக்கும் ஒரு சுரங்கம். என்றேனும் முழு பாரதத்தினை படித்துவிட வேண்டும். தற்பொழுது எஸ். ராமகிருஷ்ணனின் "உப பாண்டவம்" நாவலை படித்துகொண்டிருகிறேன். முற்றிலும் புதிய கோணம், நம்ப முடியாத முடிச்சுகள், நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் நல்லவர்களாகவும் உருமாறும் விதம் படிப்பவரை நாவலினுள் இழுத்துச்செல்கிறது.

எப்படி பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்ற கேள்விக்கு இதுவரை எனக்கும், பலருக்கும், தெரிந்த ஒரே பதில் காந்தாரி தற்செயலாக கூறியதாக அறியப்படும் "கொண்டு வந்த பிட்சையினை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்ற வார்த்தைகளே. அனால் அந்த வார்த்தைகளுள் இருக்கும் மறைபொருள் இந்த நாவலில் கிடைக்கிறது.

யுதிஷ்டிரன் குயவனின் சுடுபானைகள் கிடந்த இருளில் நின்று கொண்டிருந்தான். நாளை சுயம்வரம் நடக்கவிருக்கிறது. பாஞ்சால தேசத்து அரசனின் மகளை மணந்துகொள்வதால் அவர்களின் தேசப்பாதுகாப்பும், பலமும் கூடக்கூடும். இதுவரை தான் எந்த பெண்ணையும் அறிந்தவனேயில்லை. பீமன்தான் ஒரு பெண்ணை ருசித்தவன். அவளும் ராட்சஸ வம்சம். தம்பியர்களில் அர்ஜுனன் தான் சுந்தரன், எந்தப்பெண்ணையும் வசீகரித்துவிடக்கூடியவன். தான் மூத்தவனாகவும், தேசத்து காவலனாகவும் இருக்கவேண்டிய நிலை உண்டாகியிருப்பதால், நாளை அந்த அஸ்திரப் போட்டியில் தன்னால் நாண் ஏற்றி குறியை வீழ்த்திவிட முடியும்தானே என யோசனை கொண்டிருந்தான். 

குயவன் எங்கிருந்தோ சுள்ளிகளை பொறுக்கிவந்து பானைகளை சுடுவதற்காக எரித்து கொண்டிருந்தான். யுதிஷ்ட்ரன் அவனிடம் பாஞ்சாலியைப் பற்றிக்  கேட்டான். குயவன் அவள் யாகசேனி. நெருப்பில் பிறந்தவள். அவள் உடலும் கண்களும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் என்றான். அவளின் வனப்பைப் பற்றி தாதிகள் வெளியே சொன்ன சேதிகளை  யுதிஷ்ட்ரன் கேட்டுக்கொண்டிருப்பதை தன் இருப்பிடத்திலிருந்தே குந்தி அறிந்து கொண்டிருந்தாள்.
 இதுவரை யுதிஷ்ட்ரன் எந்தப் பெண்ணைப் பற்றியும் இத்தனை ஈடுபாட்டுடன் கேட்டுக்கொண்டிருந்ததில்லை என்பதை குந்தி அறிந்தாள். யுதிஷ்ட்ரன் குயவனிடம் பேசிவிட்டுத் திரும்பும்போது இருளில் அர்ஜுனன் நின்று கொண்டிருப்பது புரிந்தது. அவன் கைகளில் வில், அம்பு எதுவுமில்லை. நகுலன் அருகே சென்று கேட்டான்.

"என்ன செய்கிறாய் அண்ணா...?"

"அஸ்திரப் பயிற்சி".

நகுலனுக்கு புரியவில்லை. அர்ஜுனன் நிதானமாக கேட்டான்.

"நாளை சுயம்வரத்திற்கு போகிறோமா?"

"அதை மூத்தவர் தான் முடிவு செய்வார்"

நகுலன் அர்ஜுனனின் அருகாமையில் அமர்ந்து கொண்டான். அவன் தயக்கத்துடன் சொன்னான்.

"நாம் மறு உருவில் இருக்கிறோம். பிராமணர்களாக ."

"பிராமணர்கள் சுயம்வரத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்தாம். நம் குரு பிராமனர்தானே..?" 

பின் அவர்கள் பிரிந்து உறங்கச்  சென்றனர். 
சகாதேவன் நட்சத்திரங்களின் நகர்வைக் கண்டபடியிருந்தான். குயவன் அவனிடம் கேட்டான்.

"என்ன முணுமுனுக்கிறீர்கள்?"

"விதியை, விலக்க முடியாத நம் விதியை..."

"உங்களுக்கு காலத்தைக் கணிக்கத் தெரியுமா...?"

சகாதேவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

"உன் வீட்டினை நாளை பிரச்சினைகளின் பற்கள் கவ்விப்பிடிக்க இருக்கிறது"

"நோய் கொண்டா..?" கேட்டான் குயவன்.

சகாதேவன் பதில் பேசவில்லை. மறுநாள் அவர்கள் அந்தணர்களாக சபா மண்டபத்திற்குப் போனபோது அங்கே பல தேச அரசர்கள் அமர்ந்திருந்தார்கள்.கிருஷ்ணனும், கர்ணனும், துரியோதனனும் வந்து அமர்ந்திருந்தார்கள். அஸ்வத்தாமன் கூட வந்திருந்தான்.

யாவரும் வில் திறம் அறிந்தவர்கள்.

பாஞ்சாலியை சில பேடிகள் அலங்கரித்து அழைத்து வந்தனர். யுதிஷ்ட்ரன் அவளைப் பார்த்தவுடன் ரூபவதியெனத் தெரிந்துகொண்டான். பிராமண வேஷத்தில் இருந்த ஐவர் கண்களும் அவளை அறிந்து கடந்தன.

பலரும் வில்லில் நாணேற்றி இலக்கைத் தகர்பதற்க்கு முயன்று தோற்ற நிசப்தம் கூடியது. இனி பொருத்திருக்கக் கூடாது என யுதிஷ்ட்ரன் தனது சகோதரர்களைப் பார்த்தான். தான் எழுந்து சென்று வில்லை நாண் ஏற்றிட வேண்டுமென வேட்கை கொண்டவனாக அவன் தலை நிமிரும் முன்பு அர்ஜுனன் அண்ணனின் ஆசியை வேண்டி பாதங்களைப் பற்றினான். யுதிஷ்ட்ரன் செயலற்றவனாகக் கைகளை அர்ஜுனன் தலையில் வைத்தான். மறுகணம் அர்ஜுனன் வில்லில் நாணேற்றி சுழலும் இலக்கை அடித்து வீழ்த்திய சப்தம் கேட்டது.

ஒரு பிராமணன் இலக்கினை அறுத்து வீழ்த்திவிட்டான் என்ற செய்தி எங்கும் பரவியது. அரண்மனையின் வெளியே நின்றவர்கள் இதனை உரத்துக் கத்தியபடி ஓடுவதை குயவன் கண்டான்.  ஜெயித்தவன் ஐந்து பிராமணர்களில் ஒருவன் என்றதும் தனது வீட்டின் அகதிகளை அவன் நினைவு கொண்டான். வீடு திரும்பிய குயவன், மிக மெதுவாக தன் மனைவியிடம் " நாம் இங்கிருந்து தப்பிப் போய்விடுவோம். உயிர் ஆபத்து காத்திருக்கிறது. உடல் நடுங்குகிறது" என மெதுவாக சொன்னான். அவர்களை கவனித்துக் கொண்டிருந்த குந்தி என்ன நடந்தது என்று கேட்டாள்.

"உன் புதல்வர்களில் ஒருவன் சுயம்வரத்தில் வென்று விட்டான். ஒரு பிராமணன் இந்த தேசத்தின் மாப்பிள்ளையா? என்று அரண்மனையே பற்றி எரிகிறது."

"நீ பயம் கொள்ளத் தேவையில்லை. என் ஐந்து புத்திரர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அவர்கள் வரும்வரை பொறுத்திரு."

திரும்பியிருந்தார்கள் ஐவரும். எல்லா நாளையும் போல அவள் முதலில் யுதிஷ்ட்ரனை மட்டுமே அழைத்தாள். அவன் இன்று தாங்கள் போன காரியம் நல்ல விதமாக முடிந்தது என்றான். அவன் மகனின் கண்களை கண்டபோது அதில் ஆழமான வடு இருந்தது. அவள் யுதிஷ்ட்ரன் பின் நின்ற பீமனுக்கு அடுத்த அர்ஜுனன் பக்கம் கண்களை திருப்பினாள். அவன் தான் இன்று ஒரு பொருளை வென்றதாக கூறினான். அவள் சில நிமிஷங்கள் மௌனித்துவிட்டுச் சொன்னாள்.

"பகிர்ந்து கொள்ளுங்கள் ஐவரும்".

யுதிஷ்ட்ரன் தாயின் கண்களை நிமிர்ந்து பார்த்தான்.அவனால் ஆழத்தை அறிய முடியவேயில்லை. அவள் திரும்பவும் மௌனமாகிவிட்டாள். அர்ஜுனன் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் தாயின் வேண்டுகோளை திரும்ப கேட்டான். யுதிஷ்ட்ரன் பதில் சொன்னான்.

"ஐவரையும் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள்"

யுதிஷ்ட்ரன் பதிலால் கோபமுற்ற அர்ஜுனன் பதிலற்றவனாக வெளியேறி போகும்போது தாயைப் பார்த்து சொன்னான்.

"நான் இன்று வென்றது பாஞ்சாலனின் மகள் பாஞ்சாலியை"

குந்தி இப்போது மிகவும் திண்மையுடன் சொன்னாள்.

"இருக்கட்டும்.. என் வாக்கு திரும்ப பெற முடியாதது"

அவர்களில் பீமன் மட்டுமே இதனை உடனே செயல்படுத்த வேண்டும் என்றான். பீமனுக்கு பாஞ்சாலியின் உருவம், அழகு துவளச் செய்து விட்டிருந்தது. குந்தி அர்ஜுனனிடம் கேட்டாள்.

"எங்கே அந்த பெண்..?"

"வெளியே காத்திருக்கிறாள். அனுமதிக்காக"/

"அழைத்து வா.. அவளை..."

குயவன் அந்த முதிய தாயை பார்த்துக் கொண்டேயிருந்தான். அவர்கள் யாவரையும் எல்லா நாட்களையும் போல வெளியே படுக்கச் சொல்லிவிட்டு குந்தியும் பாஞ்சாலியும் மட்டும் அருகாமையில் உறங்கினர். குயவன் தன் மனைவிடம் ரகசியமாக சொன்னான்.

"காமத்தின் நாவு தன் பிள்ளைகளை பிரித்துவிடாதபடி எத்தனை சாதுர்ய முடிவு கொண்டாள் இந்த தாய். இவள் அரச குடும்பத்தவளாகத்தான் இருக்ககூடும்"

குந்தி, ஐவரின் தாய், வலிய ஸ்திரீ, பாஞ்சாலியின் மனதையும் மாற்றிவிட்டாள். யாவும் சுமூகமாகவே முடிந்தது.

0 comments: