Sunday, May 31, 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் "கேள்விக்குறி" புத்தகத்தை படித்தேன். அவரதில் ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்வின் பல சமயங்களில் கேட்கும்/எதிர்கொள்ளும் கேள்விகளான "என்னை எதற்கு படிக்க வைத்தீர்கள்?", "ஏன் என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டேங்குறாங்க?", "உன்னால ஒரு வேளை சாப்பாடு போட முடியுமா?" போன்றவற்றினை பற்றி எழுதியிருந்தார். ஆசிரியரின் கூற்றுப்படி இம்மாதிரியான கேள்விகளை கடந்து செல்லாதவர்கள் இருக்க முடியாது. அது உண்மையும் கூட.

படித்து முடித்து புத்தகத்தினை மூடினேன், என்னுளிருந்த இது போன்ற பல விடை தெரியா கேள்விகள் தானாக திறந்துக்கொண்டன. அதிலொன்று, "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?". நான் இந்த கேள்வியினை பல சமயம் எனக்குளாகவும் சுற்றத்திடமும் கேட்டிருக்கிறேன். இந்த கேள்வி என்முன் வந்து நிற்கும் தருணம் பெரும்பாலும் சின்னத்திரை வசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்யும் தருணமாக இருக்கும். அதற்கு காரணம் நான் பயணம் செய்யும் பொழுது திரையிடப்படும் படங்கள் மொக்கை படங்களாகவே இருப்பது தான். இதுவரை ஒரு நல்ல படத்தினை நான் பயணத்தின் பொழுது பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.

இறங்கி ஓடவும் முடியாமல், படத்தினை நிறுத்த சொல்லவும் முடியாமல் செல்லும் அந்த நிமிடங்கள் நான் அடிக்கடி சந்திக்கும் நரகங்கள். துரை, வில்லு, வானத்தை போல, ஆணழகன், நரசிம்மா என்பதாக இந்த பட்டியல் நீளும். வானத்தை போலவின் "லாலா ல லாலா லாலா லாலல்லலா....." வீச்சினை தாங்க முடியாமல் ஒருமுறை காரைக்குடியிலிருந்து வரும்பொழுது பேருந்திலிருந்து வெளியே குதித்தோடிய கதையெல்லாம் உண்டு. இவற்றுள் "வில்லு" படத்தின் அனுபவம் என் நினைவிருக்கும் வரை அகலாது நெஞ்சத்தில் நிறைந்து இருக்கும்.

சென்ற வாரம் ஒரு அவசர வேலையாக வாரநாளில் சொந்த ஊர் சென்று வரவேண்டிய கட்டாயம். விடுமுறை இல்லாதக்காரணத்தால் அலுவலகம் முடிந்து கடைசி பேருந்தில் சென்று மறுநாள் காலை முதல் பேருந்திலேயே திரும்புவதாக உத்தேசம். அவ்வாரே இரவு ஒன்பது மணிக்கு அசோக் பிள்ளரில் பேருந்து ஏறினேன். பேர்ணாம்பட்டு செல்லும் பேருந்து அது, நான் அதற்கு முந்தைய ஊரான குடியாத்தத்தில் இறங்க வேண்டும். என்னுடைய அணைத்து வேண்டுதல்களின் மீது சூறை தேங்காயினை உடைத்து நடத்துனர் "வில்லு" படத்தினை போட்டார்.

இரவானதாலும் வேறு பேருந்து வருமாவென்ற ஐயத்தினாலும் விதியினை நொந்தபடி படத்தினை பார்த்துக்கொண்டே சென்றேன். ஆற்காட்டினை நெருங்கும் பொழுது படம் முடிந்தது, கண்களிலிருந்த வழிந்திருந்த துளிகளை துடைத்து தூங்க ஆயத்தமானேன். ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில்தான் அணுகுண்டு போட்டார்கள் அனால் இந்த நடத்துனரோ ஹிரோஷிமாவைத்தொடர்ந்து ஹிரோஷிமாவிலேயே அடுத்த அணுகுண்டினை போடுவதுபோல வில்லுவினையே திரும்பப்போட்டார். நான் அழாதகுறையாக அவரிடம் சென்று வேறு படம் போடும்படி வேண்டினேன். அவரோ ராஜபக்க்ஷேவாக மாறி தன்னிடம் உள்ள ஒரே படம் "வில்லு" என்று கூறி என் அடுத்த கேள்விக்கு தயாரில்லாதவராக நயன்தாராவை நோக்கினார்.
நயன்தாரா அடித்த சரக்கில் எனக்கு போதையேறி பேருந்திலேயே மயங்கி விழுந்தேன்.

குடியாத்தம் வந்ததும் மயக்கம் தெளிந்து வீடுநோக்கி ஓடினேன், விஜய் என்னை நோக்கி விடாது வில்லில் நானேற்றி அம்பினை தொடுத்துக்கொண்டிருந்தார்.

வீட்டினையடையும் போது மணி அதிகாலை இரண்டு. நான்கு மணி முதல் பேருந்தில் சென்னை திரும்ப வேண்டும், வில்லால் கண்ட விழுப்புண்களால் இருந்த இரண்டு மணி நேரத்திலும் உறங்க முடியவில்லை.
தூக்கம் தொலைத்த இரவினை சபித்துக்கொண்டே நான்கு மணிக்கு மீண்டும் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். பேருந்து பேர்ணாம்பட்டிலிருந்து வந்தது, அடித்துப்பிடித்து உள்ளே ஏறினேன். ஏறியவுடன் என்னை எதிர்பார்த்தது போல நயன்தாரா "வாடா மாப்பிளை வாழப்பழ தோப்பிளே.." என்றார், நிலை தடுமாறி திரும்பினால் அதே நடத்துனர். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென காற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தேன்.

Loss of Pay ஆனாலும் பரவாயில்லையென்று அடுத்த பேருந்திற்காக காத்திருக்கத்தொடங்கினேன்....

உங்களுக்கேனும் தெரியுமா "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது"?.

Saturday, May 30, 2009

ரிஸ்க்கெடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி....








Friday, May 08, 2009

படித்ததில் பிடித்தது - 1

லஞ்சம் வாங்கினேன்
கைது செய்தார்கள்
லஞ்சம் கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்