வெள்ளந்தி மனசு
என் தந்தை பால் வியாபாரம் செய்து வருகிறார். குடியாத்தத்திற்கு அருகிலுள்ள கிராமங்களிற்கு சென்று விவசாயிகளின் பசுக்களில் பால் கறந்துவர 4/5 பணியாட்கள் இருப்பார்கள். அதில் ஒருவரின் பணி காலையிலும் மாலையிலும் மணிக்கொரு முறை சென்று அந்நேரத்தில் அவர்களிடம் உள்ள பாலினை சேகரித்து வருவது. என்னுடைய பள்ளி நாட்களில் வேலையாட்கள் யாரவது விடுமுறையில் சென்றால் நானோ அல்லது என் அண்ணன்னோ பாலினை சேகரித்து வர செல்வோம். அப்படி ஒருமுறை செல்கையில், மூங்கில்பட்டு கிராமத்தில் ஒரு வரப்பு ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்து குபேந்திரன்(பணியாள்) பால் கறந்துவர காத்திருந்தேன், என்னருகில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வந்து அமர்ந்து உள்ளூர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையில் கரும்பு சோகை கட்டும், இடுப்பில் வெட்டரிவாளும் கொண்டு எங்களை கடந்து சென்றாள். வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தவர்களை கண்ட அவர் அந்த இருவரில் ஒருவரைப்பார்த்து உரக்கச்சொன்னார்:
என்ன, மருமவ புள்ள இப்படி வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தா, உன்னைய நம்பி எப்பிடி எம்பொண்ண குடுக்கறது?
மொதல்ல நீ பொண்ண பெத்துப்போடு அப்புறம் பாரு நான் எப்படி துட்டு சேக்குறேன்னு..
உன்னைய நம்பி நான் பொண்ண வேற பெத்து போடனுமாக்கும், போய் பொழப்ப பாரு மொதல்ல..
இவ்வாறு சொல்லிக்கொண்டே அந்தப்பெண் சென்றுவிட்டார், இருவரும் தங்கள் பேச்சினை தொடர்ந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அந்தப்பெண் பதில் கூறிய இளைஞசனின் தெருவில் வசிப்பவர், மேட்டு ரவியின் மனைவி என்று தெரிந்தது.
ஏனென்று தெரியவில்லை, அந்த சம்பாஷனை நடந்து பல வருடங்கள் ஆகியும் என் நினைவில் அப்படியே படிந்துள்ளது.
கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனசினை இந்த சம்பவத்தில் நாம் சிறிது தெரிந்து கொள்ளலாம். தான் வாழ வந்த ஊரில் ஒருவன் வெட்டியாய் இருப்பதை பார்த்து தனக்கென்ன என்று போகாமல் உரிமையுடனும், நாசுக்க்காகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லிய வார்த்தைகள் சென்னை போன்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கைவருமா அல்லது இவ்வாறு பிறர் தடம் மாறும்போது உரிமை கொண்டு சொல்வார்களா என்பது சந்தேகமே...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நகரம்
நான் இதுவரை படித்திருக்கும் சில பத்து புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்". இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில் உள்ள பல கதைகளை நான் திரும்ப திரும்ப பலமுறை படித்துள்ளேன். அதில் ஒரு கதை "நகரம்".
மூனாண்டிப்பட்டியினை சேர்ந்த வள்ளியம்மாள் தன்னுடைய மகள் பாப்பாத்தியினை கிராம பிரைமரி ஹெல்த் சென்டர் டாக்டரின் அறிவுரைப்படி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும், மருத்துவ வாடைகளும் அதனால் ஏற்படும் விளைவுமே கதை.
என்னை இதுவரை பாதித்த கதைகளுள் முக்கியமான ஒன்று இது.
உங்களிடம் பதினைந்து நிமிடங்களும், கதை படிக்கும் மனநிலையும் இருந்தால் இந்த link'ல் சென்று கண்டிப்பாக படிக்கவும்:
http://www.scribd.com/doc/2582483/sujatha-
Monday, November 09, 2009
கூட்டாஞ்சோறு - 09/11/09
Labels: கூட்டாஞ்சோறு
Posted by தியாகு at 12:42 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment