Monday, November 16, 2009

சென்னை - 2

எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லரிப்பா போச்சு.

நேற்று தான் சென்னையில் என்னுடைய பத்து வருடங்கள் பற்றி ஒரு பதிவினை போட்டு வைத்திருந்தேன், இன்று என் அலுவலகத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.....

இன்றைக்கு அலுவலகத்தில் என்னுடைய அணியில் ஒருவர்(விஜய்) புதியதாக சேர்ந்தார். அவரை எனக்கு அறிமுகபடுத்த HRடீமில் இருந்து அழைத்தார்கள். நானும் சென்றேன். அங்கே இரண்டு புதியவர்களும் HRரும் நின்று கொண்டிருந்தார்கள். புதியவர்களில் ஒருவரை அரைகண்ணால் பார்த்தபடியே HRரிடம் இவர்தானா விஜய் என்று கேட்டேன், அவர்கள் இல்லை மற்றொருவர் என்று கூற நானும் அவரை அழைத்துக்கொண்டு என் இருப்பிடம் வந்துவிட்டேன்.
புதியவருக்கு அலுவலகம் மற்றும் பணிகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன், சற்று தொலைவில் இருந்து என்மேல் இரண்டு கண்கள் ஊறுவதை உணர்ந்து திரும்பி பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன் நான் இவரா விஜய் என்று கேட்ட நபர் என்னையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். ஒரு ஐந்து வினாடிகள் அவரை உற்று பார்த்தவுடன் என் உடம்பில் ஒரு வினாடி மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது. செந்தில் அண்ணன். சென்னையில் கழித்த பத்து வருடங்களில் முதல் மூன்று வருடங்கள் என்னுடைய அறையில் இருந்தவர். இம்மாநகரில் எனக்கு கிடைத்த முதல் சில அறிமுகங்களில் அடங்குபவர்.

எவ்வளவு துன்பங்கள், கடினங்களை எதிர் கொண்டாலும் சிரித்த முகத்துடன் இருப்பவர். பணி நிமித்தமாக பெங்களுருக்கு குடி பெயர்ந்தார், அதன் பிறகு அவருடனான தொடர்பு முற்றிலுமாக அறுபட்டது. பலமுறை நினைத்தும் விடாத முயற்சி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

அதே புன்சிரிப்பு மாறாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்" - அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!

இன்று அவருடன் சென்று குடித்த தேநீர் வழக்கத்தை விட நன்றாக இருப்பதாகப்பட்டது.

1 comments:

Mathan said...

Ungaludaiya Thamizhlil muthirvum, merukum aeri konda pogirathu...Vazhthukkal