Thursday, February 25, 2010

Testophobia

Greenpeace India - IT துறையில் வேலை செய்யும் சிலபலர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். மாதம்தோறும் குறைந்தபட்சமாக ரூ.250 ஐ தங்களுடைய வங்கிகணக்கில் அவர்களாகவே எடுத்துக்கொள்ள பட்டயம் எழுதி கொடுத்துள்ளனர். கேட்டால், உலகின் பசுமையினை பாதுகாக்க தம்மால் இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு சென்று ஏதும் செய்ய இயலாது, எனவே அவ்வாறு செய்பவர்களை ஊக்குவிக்கின்றோம் என்கிறார்கள். இப்படி canteen வாசலில்  ஜீன்ஸ், டீ-ஷர்ட் 'சல்லி'களிடம் (உபயம்: செல்வேந்திரன்) எழுதி கொடுத்துவிட்டு இவர்கள் நேரே செல்வது விளைநிலத்தை வறுமையின் துணைகொண்டு வாங்கி/அபகரித்து கூறு போட்டு கான்கிரீட் மரம் நட அழைக்கும்  rea(e)l-estate நிறுவனங்களிடம். 

*********

ள்ளி முதல் கல்லூரி வரை செக்குமாடு போல தேர்வினை மட்டுமே இலக்காக கொண்டு ஓடியவன் நான். சமீபகாலமாக எந்தவொரு கால நிர்ணயமும், இலக்கும் இல்லாமல் மனதிற்கு பிடித்த தொழில் சாராத, சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுகங்களை உணர்ந்தபின்  தேர்வு என்ற இல்லக்கினை மட்டுமே கொண்டு அக்கம் பக்கம் பாராமல் எழுத்துக்களை விழுங்குவது கடினமாக உள்ளது. தேர்வு என்ற சொல்லே ஒருவித அயர்ச்சியினை தருகிறது. அநேகமாக testophobia'வால் பாதிக்கப்பட்டுளேன் என்று நினைக்கின்றேன்.

Friday, February 12, 2010

சில புகைப்படங்கள்

Friday, February 05, 2010

எங்கும், எங்கும், பிளாஸ்டிக் மயம்

    
நேற்று குளித்து முடித்து துண்டினை உலர்த்த மொட்டை மாடி சென்ற பொழுது பார்த்த "பிளாஸ்டிக் முறம்".


வீட்டின் உரிமையாளர் கோதுமையினை அந்த முறத்தில் பரப்பி காய வைத்திருந்தார்.  நேற்றுதான் முதன்முதலாய் நான் பிளாஸ்டிக் முறத்தினை பார்க்க நேர்ந்தது. மூங்கில் கொண்டு முடையபட்டதை போல அச்சு கொண்டு செய்யப்பட்ட ஒன்று.

பார்த்தவுடன் ஆச்சர்யம் மேலோங்காமல் ஒருவித வருத்தமே தோன்றியது. உடன், சமீபத்தில் தீராத பக்கங்களில் படித்த கவிதை ஒன்று கண்முன்னே  நிழலாடியது:


நடைபாதி ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம். 

அருகே சென்று சில கோதுமை தானியங்களை கையிலெடுத்து உற்று பார்த்தேன், பிளாஸ்டிக் அல்ல நிஜ தானியங்கள்தான்.
 

கொஞ்சம் தேநீர் நிறைய கண்ணீர்

   
சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம் கவிதை தொகுப்பில் "ஆளுக்கொரு கோப்பை" என்றொரு கவிதையினை படித்தேன்.நான் தேநீர் அருந்தும் முறையினை மாற்றிய வரிகள் அவை. அதுவரை தேநீர் அருந்துவதை ஒரு தினசரி கடனாக செய்துவந்தவன் அந்த தருணங்களை சிறிது ரசிக்க முயற்ச்சித்தேன்.

கவிதையின் சில வரிகள்:


தேநீர் பருகும் கணங்கள்
சில நிமிட திருவிழாக்கள்
.......
கூப்பிட்டபோது
வரம்தந்தோடிப்போகும்
மலிவு தெய்வம் தேநீர்

உதடுகளில் சூடுகொளுத்தி
கதகதப்பாய் நாவுதடவி
சுவயரும்புகள் ஒவ்வொன்றாய்த்
தொட்டெழுப்பி
.........
ஆனால் தேவரீர்
தேநீர்பருகத் தெரியவில்லை
உங்கட்கு
பொன்கரைத்த அதன் நிறம் பாராமல்
எங்கேயோ வெறிக்கிரீர்கள்
நுரையுடையும் அதன்
மொழிகேளாமல்
அர்த்தம் வற்றிய சொற்களால்
பெசிக்கொண்டிருகிறீர்கள்
....
தேநீர் தத்துவமே
புரியாத நீங்கள்
எங்கனந்தான் புரிவீரோ
இருப்பை
இறப்பை
கடவுளை
காதலை
அணுவை
அண்டத்தை
......


சென்னையின் நெருக்கடி மிகுந்த சைதையில் வைரமுத்துவின் வரிகள் உணர தேநீர் அருந்துவது பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. உதட்டில் தேநீர் கொண்டு சூடு கொளுத்தும்முன் சுட்டெரிக்கும் வெயில் மண்டையினை கொளுத்தி விடும், நுரையுடையும் நுண் ஒலிகள் வாகன இறைச்ச்சலில் கரைந்துவிடும், வாழ்க்கையின் தத்துவங்களே பெரும்பாலும் புரியாமல் விழிக்கும் பொழுது தேநீர் தத்துவதினை எங்ஙனம் யோசிப்பது. விடுமுறைகளில் ஊர் செல்லும் சில சமயம் நுரை உடையும் ஒலி கேட்டு, இமைகள் மூடி, உதடுகளில் சூடு பரப்பி அருந்தியதுண்டு.  ஆனந்தமான தருணங்கள் அவை.

அந்த ஆனந்தமான தருணங்களை சமீபத்தில் புரட்டி போட்டது "எரியும் பனிக்காடு" நாவல். கொத்தடிமைகளாய் உலகினுடனான அனைத்து தொடர்புகளையும், வாழ்வின் அனைத்து சுகங்களையும் இழந்து, அட்டைகள் உறிஞ்சியது போக நில்லாமல் ஒழுகிய குருதியினை தேநீர்ச்செடி வேர்களில் ஊற்றி, தங்களை தாங்களே பலிகொடுத்து  தேநீர் தோட்டங்களை உருவாக்கி வளர்த்த ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பின் பயனே இன்று உதகையிலும், மைசூரிலும், கூர்க்கிலும் உடலெங்கும் பச்சை உடை பூண்டிருக்கும் தோட்டங்கள்.


 சில நாட்களாக பொன்கரைத்த தேநீரின் நிறம் ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தம் கலந்ததாலே வந்ததாக தோன்றுகிறது.