10 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பினேன், வாஷிங்டன் D.C'யிலிருந்து லண்டன் வழியாக சென்னை பயணம். D.C'யில் security check'ர்க்காக வரிசையில் காத்திருந்த பொழுது எனக்கு ஐந்து நபர்களுக்கு முன்பாக அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் நின்றுக்கொண்டிருந்தார். அவரருகில் ஒரு வாலிபனும் அவர் இளம் மனைவியும் நின்றுகொண்டு பெரியவருடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் மூவரும் என்னருகில் வந்தார்கள், வாலிபன் கேட்டான்:
excuse me
yes
are you going to Chennai?
yes
cool, he is my father
oh..hello sir
hi
he is also going to Chennai, we are not travelling, he is going alone, will you be able to help him during the transit in London and also in flights?
உங்க அப்பாவுக்கு தமிழ் தெரியுமா?
yes, he knows
கவலை வேண்டாம், நான் உதவுகிறேன்
thank you very much.
பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் ஏறுவதற்கு முன் இருவரும் பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். எட்டு மணி நேர பயணத்திற்கு பிறகு லண்டன் வந்து சேர்ந்தோம். சென்னை விமானம் அடுத்த நான்கு மணி நேரத்தில். அமெரிக்க கிளம்பும் போதே உடன் பணிபுரியும் நண்பன் சென்னை திரும்பும் பொழுது அயல்நாட்டு சரக்கோடு தான் திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான்.
லண்டன் விமான நிலைய Duty free கடையில் அவனுக்கானதை வாங்க வேண்டும் என்பது என்னுடைய திட்டம். எதிர்பாரத விதமாக இந்த பெரியவர் என்னுடன் வந்து ஒட்டிக்கொண்டதால் அவரிடம்(மரியாதை காரணமாக) நான் சரக்கு வாங்க வேண்டும் அதற்கான கடைக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல தயங்கி ஒரு இடத்தில அவரை அமர செய்து சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறி சென்றேன். Duty free கடையில் இரண்டு பாட்டில்கள் வாங்கி திரும்பினேன். வந்த என்னிடம் சரக்கு பாட்டில்கள் இருப்பதை கவனித்த பெரியவர் கேட்டார்,
என்ன தம்பி சரக்கு வாங்கவா போயிருந்தீங்க?
(தயங்கியபடி) ஆமாங்க
அடடா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல்யிருக்ககூடாது, நானும் வந்து இருப்பேன்ல, நானும் உங்களை மாதிரி ஒரு குடிகாரன் தான்
என்னது குடிகாரனா!!!! ஹலோ பெரியவரே, எனக்கு குடிபழக்கம் கிடையாது , நான் யோக்கியன்
யோக்கியனா, யோக்கியனுக்கு சாராய கடையில என்ன வேலை?
இது ஏன் நண்பனுக்காக வாங்கினது
இப்படி தான் பலபேர் சொல்லிக்கிட்டு திரியறானுங்க, எந்த குடிகாரன் தன்னை ஒரு குடிகாரன்னு ஒத்துக்குறான்?
நம்புங்க எனக்கு குடி பழக்கம் கிடையாதுங்க...
சரி சரி வாங்க கடைக்கு போகலாம், எனக்கு சரக்கு வாங்கணும்
ஹலோ சார், நம்புங்க நான் குடிகாரன் இல்லை, சத்தியமா இது என் நண்பனுக்கு தான், ஹலோ சார்....
ஹூம்ம்ம்... எனக்கு செவி சாய்க்காதவராக கடையினை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.